பொய்ப் பிரசாரத்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது!

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த, பொய்களையும் போலிப் பிரசாரங்களையும் அள்ளி வீசி ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என எதிர்க்கட்சியினர் கனவு காண வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு நிலையிலும் பலவீனமான அரசு அல்ல என்பதை எதிர்க்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அரசின் நிர்வாகப் பொறிமுறையும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பெரும்பான்மை மக்களின் பலமான ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறுவப்பட்ட தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவது இலகுவான காரியமல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாக மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணையின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது அரசாங்கத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும், இத்தகைய போலிப் பிரசாரங்களைக் கண்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பொய்யான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, நாட்டின் அபிவிருத்திக்குச் சாதகமான முறையில் எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், இத்தகைய பிரசாரங்களால் அரசாங்கத்தின் பயணத்தைத் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் கே.டீ. லால் காந்த மேலும் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.