பொலிஸாராக நடித்து மோசடி

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பகுதியில், பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று நடித்து வீதியில் செல்வோரைச் சோதனைக்குட்படுத்தி பணம் மற்றும் சொத்துகளைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை (21) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 27 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர்கள் சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனகேமுல்ல, அமண்தொலுவ, தம்புதுரய மற்றும் உதம்மிட்ட ஆகிய பகுதிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று நடித்து, வீதிகளில் செல்வோரைச் சோதனையிட்டு பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டமை தெரியவந்துள்ளது.
மேலும், பணம் மற்றும் சொத்துக் கொள்ளைச் சம்பவங்களுடனும், கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதிரிசூரிய பகுதியில் இடம்பெற்ற பணக் கொள்ளைச் சம்பவத்துடனும் சந்தேகநபர்களுக்குத் தொடர்பு இருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று வியாழக்கிழமை (22) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.