—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மக்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலா?

மக்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அனுமதி வழங்கும் தற்போதைய அரசு, மறுபுறம் சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவர்களை ஒடுக்குவதற்காகப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாகச் சர்வஜன அதிகாரம் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே இதனைத் தெரிவித்தார்.

திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பில் அரசு காட்டும் தாராளமான அணுகுமுறையையும், மறுபுறம் நாட்டு மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் அடக்குமுறைச் சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது தவறாகப் பயன்படுத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசை விமர்சிப்பவர்கள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுபவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் நிலை உருவாகக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான சட்டங்கள் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தையும், எதிர்ப்பைப் பதிவு செய்யும் ஜனநாயக உரிமையையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் மதுர விதானகே சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கூட்டாட்சி முறை அல்லது சமஷ்டி தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட கருத்துகள் குறித்து அரசாங்கம் தனது தெளிவான நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்ததாகக் கூறும் அரசு, மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கத் தவறி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பெறுமதி சேர் வரி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் கல்வி உபகரணங்கள் மீதான வரிகள், மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றால் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருவதாகவும், அரசு இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பான விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேரடியாகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்களை அடக்குவதற்குப் பதிலாக, சட்டங்களையும் கடுமையான ஒழுங்குவிதிகளையும் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு நிகரான அடக்குமுறைச் சூழலை உருவாக்க அரசு முற்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக மட்டுமே அமைய வேண்டும் என்றும் மதுர விதானகே வலியுறுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.