—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மக்கள் மீது வரிச் சுமை: சாகர குற்றச்சாட்டு

மக்கள் மீது வரிச் சுமை: சாகர குற்றச்சாட்டு

எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத நிலையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்களுக்கு வரிகளைச் சுமத்திவிட்டுப் பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் ஜனாதிபதியின் மனநிலை குறித்துப் பாரிய கேள்வி எழுந்துள்ளது. அரசமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவர் மனநலக் குறைபாடு அல்லது சுயநினைவின்றிச் செயற்படும்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் புதிய வரிகள் எதனையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வரிகளையே தொடர்வதாகவும் கூறியுள்ளார். நாட்டின் நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி இவ்வாறான பொய்யான பிரசாரத்தை முன்னெடுப்பது தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதியினாலும் அவரது அரசாங்கத்தினாலும் 2025ஆம் ஆண்டில் வாகனங்கள், மதுபானம், இனிப்புப் பானங்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கு 6 சதவீதம் புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 2025 பெப்ரவரியில் மின்சார வாகனங்களுக்கான வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதுடன், 20 சதவீதம் இறக்குமதி வரியும் 50 சதவீதம் கூடுதல் கட்டணமும் விதிக்கப்பட்டன.

அத்துடன், 2025 ஏப்ரலில் தடுப்பு வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், மதுபானம், புகையிலை மற்றும் சூதாட்ட நிறுவனங்களுக்கான நிறுவன வரி 40 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டன. வெளிநாட்டுச் சேவை வழங்குநர்களுக்கு 15 சதவீதம் வரியும் புதிதாக விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2026 மே மாதத்தில் 2.5 சதவீதம் சமூகப் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டதுடன், வாகன இறக்குமதிக்கு 50 சதவீதம் கூடுதல் கட்டணமும் விதிக்கப்பட்டது. 2026 ஜூன் மாதத்தில் மூலதன இலாப வரி தனிநபர்களுக்கு 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும், பரஸ்பர நிதியங்களுக்கு 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. மேலும், கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோரும் தடுப்பு வரி விதிப்புக்காகப் புதிதாக உள்ளடக்கப்பட்டனர்.

மேலும், 2026 ஜூலை மாதத்தில் டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீதம் வற் வரி விதிக்கப்பட்டது. இவ்வாறு மக்கள் மீது பாரிய வரிச் சுமையை ஏற்றிவிட்டு, வரிகளை உயர்த்தவில்லை எனக் கூறுவது ஜனாதிபதியின் அறியாமையையே காட்டுகின்றது.

வரிகளை வசூலித்துவிட்டு வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றதே தவிர, நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் நடைபெறவில்லை.

முந்தைய தலைவர்கள் வரிப் பணத்தில் பாடசாலை ஆய்வகங்கள், பல்கலைக்கழக பீடங்கள் மற்றும் வைத்தியசாலை வார்டுகளை உருவாக்கிய போதிலும், கடந்த இரு ஆண்டுகளில் இந்த அரசாங்கத்தால் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை" என்றார்.

மத்திய கிழக்கு யுத்தத்தினால்தான் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி கூறுவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

"யுத்தத்தைக் காரணம் காட்டிப் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாத ஆட்சியாளர்கள் எதற்கு என முன்னதாகக் கேள்வி எழுப்பிய ஜனாதிபதியின் வார்த்தைகளே இன்று அவரையே திரும்பத் தாக்கியுள்ளன. எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு என்பன இந்த அரசாங்கத்தின் தோல்வியையே காட்டுகின்றன.

இன்று நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, பொலிஸ் நிலையங்களில் இளைஞர்கள் உயிரிழக்கின்றனர். நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் முயன்றாலும், ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கள் இந்த அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்" என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.