மதுபான விற்பனை: தபால் ஊழியர் கைது

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்துமுல்ல, சொரகுண பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கான தபால் கடிதங்களை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகிக்காமல் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, பிரதேச மக்களுக்கு விநியோகிக்கப்படாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தபால் கடிதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தபால் கடிதங்களை உரியவர்களிடம் விநியோகிக்காமல் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று புதன்கிழமை (21) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.