சுற்றுலாப் பேருந்து விபத்து: 13 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு அருகில் பார ஊர்தி மீது சுற்றுலாப் பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.
கெய்ரோ – அசியுட் மேற்குப் பாலைவன நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிவேகமாகப் பயணித்த சுற்றுலாப் பேருந்து பார ஊர்தி மீது மோதியதில், பேருந்தின் முன்பகுதி முற்றாக நசுங்கிச் சேதமடைந்ததுடன், அதன் இருக்கைகளும் சிதறிக் கிடந்துள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கிசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எகிப்தில் முறையற்ற வாகனப் பராமரிப்பு, கவனக்குறைவான வாகன ஓட்டம் மற்றும் சட்ட அமுலாக்கத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாகத் தொடர்ச்சியாக வீதி விபத்துகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Comments 0
Be the first to comment.