—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மழை தீவிரமடையும் எச்சரிக்கை

மழை தீவிரமடையும் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்குத் திசையில் நகர்ந்துள்ளதுடன், படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (22) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற எதிர்கால வானிலை நிலைமைகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையைச் சூழ இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயம் (ITCZ) காணப்படுவதுடன், நாட்டின் சில பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்துள்ள நிலையில், நாளையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாள் முழுவதும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயத்தின் செல்வாக்கு காரணமாக, ஒக்டோபர் 23ஆம் திகதியளவில் அந்தமான் தீவுகளைச் சூழ குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், அது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், காற்றோட்டம் இலங்கை ஊடாக வீசுவதால் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை நிலைமை இந்த மாதம் 27ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கும் எனப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் காணப்படும் குறைந்த அழுத்த நிலைமையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகத் தீவிரமடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், குறிப்பாகப் பலநாள் மீன்பிடிப் படகுகளை இயக்குபவர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.