மின்தடை குறித்து சுரேஷ் கேள்வி

அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் இலங்கை மின்சார சபையின் சரியான பராமரிப்பு, முகாமைத்துவம் ஆகியவை இல்லாததே மின்கட்டண உயர்வுக்கும் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கும் காரணமா என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மின்சார சபை மாபியாக்களின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதுடன் தடையற்ற மின்சாரத்தையும் வழங்குவதாகவும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், தற்போதும் கடந்த காலத்தைப் போலவே மின்கட்டணம் அதிகரித்துள்ளதுடன், நாள்தோறும் மின்தடையும் ஏற்படுகின்றது. மின்சாரத் துறையில் உள்ள மாபியாக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தற்போதைய அரசாங்கமும் திணறுகின்றதா என்ற கேள்வி இதன் மூலம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், மின்சாரத் துறை சில மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதிலிருந்து அந்தத் துறையை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, மின்சார சபையை நான்கு பிரிவுகளாகப் பிரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட பின்னர், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க நுகர்வோர் மீது சுமத்தப்பட்ட மின்கட்டணங்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டதாகவும், அதற்கேற்ப மின்சார உற்பத்தியும் விநியோகமும் முறையாக இடம்பெறுகின்றனவா என்ற கேள்வி தற்போது எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்தம் பல தடவைகள் மின்சாரம் தடைப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் இந்தத் தடைகள் சில நிமிடங்களும் பல சந்தர்ப்பங்களில் பல மணித்தியாலங்களும் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபை, இணைப்புகள் மற்றும் மின்விநியோகத்தில் ஏற்படும் தடைகளைச் சீரமைப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகச் சில சந்தர்ப்பங்களில் அறிவிக்கின்றது. எனினும், பல சந்தர்ப்பங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம், சூரிய சக்தி மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. மறுபுறம், அனல் மின்னுற்பத்தி சாதனங்கள் பழுதடைந்துள்ளதால் மின்வெட்டைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு காரணங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூரிய சக்தி மின்னுற்பத்தியை தேசிய மின்னுற்பத்திக் கட்டமைப்புடன் முறையாக இணைப்பதற்குத் தேவையான தொழில்நுட்பம் அல்லது சாதனங்கள் இல்லையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மழைக்காலத்தில் நீர்மின் உற்பத்தி அதிகளவில் கிடைக்கக்கூடிய சூழ்நிலையில், மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகின் பல நாடுகளில் இரண்டு நிமிடங்கள் மின்சாரம் தடைப்பட்டால்கூட அது முக்கிய பேசுபொருளாக மாறிவிடுகின்றது. ஆனால், இலங்கையில் பல தடவைகள் மின்சாரம் தடைப்படுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில், மின்சார விநியோகத் தடைகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் பல மணிநேரங்கள் பின்னோக்கித் தள்ளுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு மின்கட்டணங்களைச் சீரமைப்பதுடன், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments 0
Be the first to comment.