மஸ்கெலியா வைத்தியசாலையில் மழைநீர் கசிவு; நோயாளிகள் கடும் அவதி!

மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அமைந்துள்ள மூன்று பரிசோதனை அறைகளுக்குள் மழைநீர் கசிவதால், மருத்துவர்களும் நோயாளிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் உள்ள மூன்று பரிசோதனை அறைகளின் கூரைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அஸ்பெஸ்டாஸ் கூரைத் தகடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இதனால், மழைநீர் அறைகளுக்குள் கசிவதால் நோயாளிகளைப் பரிசோதிப்பது இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடம் பாழடைந்த நிலையில் காணப்படுவதால், தற்போது நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனினும், அங்கு போதிய இடவசதி இல்லாததால் மருத்துவர்கள், செவிலியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் மழை பெய்யும் பிரதேசமான மஸ்கெலியாவில் அமைந்துள்ள இந்த அரச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக, தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராம மற்றும் நகரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் நாளாந்தம் வருகை தருகின்றனர்.
அத்துடன், சிவனொளிபாத மலை யாத்திரைக் காலத்தில் திடீரென நோய்வாய்ப்படும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்திரிகர்களும் சிகிச்சைக்காக இந்த வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டிடம் சில காலமாக மோசமான நிலையில் காணப்படுவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பலமுறை அறிவித்த போதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த மாதம் மத்திய மாகாண ஆளுநர் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் நேரடியாக வைத்தியசாலைக்கு வருகை தந்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
எனினும், இதுவரை அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதுடன், சுமார் மூன்று இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதேச மக்களின் நலனைக் கருத்திற்கொண்டும், சிவனொளிபாத மலைக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான யாத்திரிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாகத் தலையிட்டு மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.