மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய விஞ்ஞான – வர்த்தக தினம்!
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர்களின் விஞ்ஞான – வர்த்தக தின நிகழ்வுகள் கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றன.
கல்லூரி அதிபர் அருட்தந்தை A.P. திருமகன் அடிகளாரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான வினா – விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் வருடாந்தம் வெளியிடப்படும் "பரிணாமம்" இதழின் 7ஆவது வெளியீடும் இடம்பெற்றது.
அத்துடன், வணிக மாணவர் மன்றத்தால் உயர்தரப் பிரிவு வணிக மாணவர்களுக்கான எதிர்பார்ப்பு வினா – விடைகளுடன் கூடிய வினா – விடைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது.
மேலும், "இன்றைய தொழில்நுட்பப் பெரும் புரட்சியுகப் போக்கின் அடிப்படையில் எதிர்கால உலகை முற்போக்குடன் வழிநடத்த வல்லது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளா? அல்லது வணிக முதலீடுகளா?" எனும் தலைப்பில் மாணவர்களின் பட்டிமன்ற நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீடப் பேராசிரியர் S. ரஜுமேஷ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அத்துடன், சமுர்த்தி மகா சங்கப் பிரதம முகாமையாளரும் யாழ்ப்பாண கம்பன் கழகச் செயலாளருமான சொல்லருவி T. கருணாகரனும் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அயற்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Comments 0
Be the first to comment.