2,819 பயிற்சி தாதியர்களுக்கு நியமனம்!

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் தாதியர் பாடசாலைகளில் மூன்றாண்டுப் பாடநெறியை நிறைவு செய்த 2020ஆம் ஆண்டு மாணவர் தாதியர் குழுவைச் சேர்ந்த 2,819 பயிற்சி தாதியர்களை, தரம் மூன்று தாதியர் உத்தியோகத்தர்களாகச் சுகாதார சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
முற்பகல் அலரி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்வாறு நியமனம் பெறும் தாதி உத்தியோகத்தர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்நடவடிக்கையானது வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் தாதியர் சேவையை மேலும் வலுப்படுத்துவதோடு, மக்களுக்குத் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான மனித வளத்தைப் பூர்த்தி செய்வதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments 0
Be the first to comment.