மீண்டும் வெடிக்குமா மக்கள் போராட்டம்?

நாட்டில் மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும், அரசின் முறையற்ற நிர்வாகத்தால் நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்துக்காக கியூ.ஆர். குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், எரிபொருள் இல்லாத நிரப்பு நிலையங்களையும் நீண்ட வரிசைகளையும் இன்றும் பரவலாகக் காண முடிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தோட்டப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவு சார்ந்த உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆற்றல் நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்குப் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கத் தவறிய அரசு, மக்களின் பட்டினியை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துப் பேசிய அவர், நேரடி அந்நிய முதலீடுகள் நாட்டுக்கு வருவதாக அரசு கூறினாலும், கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்திருந்த சீன முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைக் கைவிட்டு வெளியேறி வருவதாகத் தெரிவித்தார். இதனால், அவர்களுக்கு டொலர்களில் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சச் சூழல் காரணமாக, 2022ஆம் ஆண்டைப் போன்றதொரு மக்கள் போராட்டம் (அரகலய) மீண்டும் வெடிப்பதற்கான அபாயம் காணப்படுவதாகவும் புத்திக பத்திரண எச்சரித்தார்.
சமூக மற்றும் கலாசார விடயங்கள் குறித்துப் பேசிய அவர், பௌத்த துறவிகள் தொடர்பான விவகாரங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமை மனிதர்களுக்கோ அமைச்சர்களுக்கோ கிடையாது என்றும், அவை சாசன சம்பிரதாயங்கள் மற்றும் சங்க சபைகளினால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டியவை என்றும் தெரிவித்தார்.
அதேபோல், ‘பச்சைக்குத்தல்’ போன்ற விடயங்களைக் காலத்துக்கு ஒவ்வாத இடதுசாரிச் சிந்தனைச் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முயல்வது அடிப்படை உரிமைகளுக்கும் மனித சுதந்திரத்துக்கும் எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார். அடிப்படை உரிமைகளை மதிக்காத எந்தவொரு அரசியல் இயக்கமும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.