மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ‘அர்னாப்’ சூறாவளியாக வலுவடைந்துள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இன்று திங்கட்கிழமை மீன்பிடிச் சமூகத்தினருக்கு அவசர விசேட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, குறித்த ‘அர்னாப்’ சூறாவளி இலங்கைக்கு வடக்குக்கும் கிழக்குக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளி வரும் நாட்களில் மேலும் தீவிரமடைந்து, மேற்கு மற்றும் வடமேற்குத் திசைகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை அவதானிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்குக் கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் வரை அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள அனைத்துக் கடற்பகுதிகளும் மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் சீற்றத்துடனும் காணப்படும் என்றும் கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்குக் கடற்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படகுகளும் மீனவர்களும், சூறாவளியின் மையப்பகுதி மற்றும் அது நகரக்கூடிய பாதையிலிருந்து உடனடியாக இயன்றவரை விலகிப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடற்றொழிலாளர்கள் அனைவரும் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானமாகக் கண்காணிப்பதுடன், கடற்றொழில் திணைக்களமும் கடற்படையும் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிச் செயற்படுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments 0
Be the first to comment.