மீள்குடியேற்றம், நீதி கோரி பொதுப் பிரகடனம்
வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு (இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு) 36 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதனை நினைவுகூரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வும் ஊடகவியலாளர் மாநாடும் யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (30.10.2026) வெகுசிறப்பாக இடம்பெற்றன.
"மறுக்கப்பட்ட உரிமைகள், மீள்குடியேற்றம், நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைந்த அழைப்பு" எனும் பிரதான தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். முஸ்லிம் கலாசார சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் ஏ.சி. மஹானாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நினைவுகூரல் நிகழ்வு, யாழ். கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல் அஸீஸ் அவர்களின் பிரார்த்தனையுடன் (கிராஅத்) முறைப்படி ஆரம்பமானது.
நிகழ்வில் பிரதம பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம். திருவரங்கன் மற்றும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் ஜனாபா எம்.எஸ்.எப். சப்னா ஆகியோர் தங்களது முதன்மை உரைகளை நிகழ்த்தினர்.
அத்துடன், பொதுமக்கள் சார்பில் வர்த்தகப் பிரதிநிதி ஜனாப் முஜாஹித் அவர்களும் கருத்துரையாற்றினார்.
வடக்கு மாகாண முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் சார்பில் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினரும் யாழ். முஸ்லிம் கலாசார சபையின் செயலாளருமான ஜனாப் என்.எம். அப்துல்லாஹ் அவர்கள் மாநாட்டின் முக்கிய அம்சமான ஆறு அம்சப் பொதுப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.
கலந்துகொண்டோர் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட குறித்த பொதுப் பிரகடனத்தில், வடக்கு மாகாணம் முஸ்லிம் மக்களினதும் பூர்வீகத் தாயகமாகும் என்றும், அங்கு தமது மத, கலாசார மற்றும் பண்பாட்டு அடையாளங்களுடன் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்வது அவர்களின் அடிப்படை உரிமை என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், 1990ஆம் ஆண்டு பலவந்த வெளியேற்றத்தின் வரலாற்றையும் பாதிப்புகளையும் முறையாக ஆவணப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும் பரிகாரங்களையும் வழங்க வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் தமது நிலம் மற்றும் சொத்து உரிமைகள் பாதுகாக்கப்பட்ட நிலையில், விருப்பத்தின் அடிப்படையில் பூர்வீக இடங்களுக்குத் திரும்பி வாழ்வது உறுதிசெய்யப்பட வேண்டும்.
வீட்டுவசதி, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைச் சேவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மீள்குடியேற்றச் செயல் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இனம், மதம் அல்லது அரசியல் அதிகாரத் தலையீடுகள் இன்றி, மீள்குடியேறும் மக்களுக்கு உரிய உரிமைகளும் உதவிகளும் சமமாகச் சென்றடைவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
அத்துடன், தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் மீண்டும் இதுபோன்ற பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாகாத வகையில் பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆறு அம்சங்களும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுப் பிரகடனமாக வெளியிடப்பட்டன.
வரலாற்றுப் பதிவாக நிறைவேற்றப்பட்ட இப்பிரகடன நிகழ்வில், யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ ஆர்.எப். றிஸ்லா, யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், வர்த்தகப் பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Comments 0
Be the first to comment.