—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

யானைகளால் விவசாயிகளுக்குப் பெரும் சேதம்!

அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த இரண்டு காட்டு யானைகள், பயன்தரும் 20 தென்னை மரங்களைப் பிடுங்கி அழித்துள்ளதுடன், நெல் களஞ்சிய அறையையும் உடைத்து ஐந்து நெல் மூட்டைகளைச் சேதப்படுத்தியுள்ளன.

நள்ளிரவு முதல் அதிகாலை 4.00 மணியளவுக்கு இடைப்பட்ட நேரத்தில் புறத்தோட்டம் பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகளும், ஏ.ஆர். உபைதுல்லா என்பவருக்குச் சொந்தமான காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 20 பயன்தரும் தென்னை மரங்களை முற்றாக அழித்துள்ளன. அத்துடன், அங்கிருந்த நெல் களஞ்சிய அறையின் இரும்புக் கதவை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள முல்லைத்தீவுக் கிராமத்திற்குள் ஊடுருவிய காட்டு யானைகள், அங்குள்ள அல்-ஜெஸீறா வித்தியாலயத்தின் சுற்றுமதிலையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.

குறித்த இரண்டு காட்டு யானைகளும் குடியிருப்பு வீடுகளுக்குள் நுழைய முயன்றபோது விழிப்படைந்த கிராம மக்கள், வீதிகளில் இறங்கி சத்த வெடிகளை வெடிக்கச் செய்தும் கூச்சலிட்டும் யானைகளை விரட்டியடித்துள்ளனர். பொதுமக்களின் இந்த உடனடி நடவடிக்கையால் ஏற்படக்கூடிய மேலதிக உயிர்ச் சேதங்களும் சொத்துச் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

அப்பகுதியின் எல்லைப் பகுதியில் யானை வேலிகளை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் நீண்டகாலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, புறத்தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களின் உடைமைகளையும் விவசாயப் பயிர்களையும் அழித்துச் சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.