வெற்றிப் பயணத்தில் ஈழத்தமிழ் வீராங்கனைகள்
இந்தியாவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப் 2026 தொடரில் அபார திறமைகளை வெளிப்படுத்தி வரும் இலங்கை மகளிர் கபடி அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
முதலாவது கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப் தொடர் இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு ஈழத்தமிழ் வீராங்கனைகளை உள்ளடக்கிய, மதுரிகா ஹன்சமாலி தலைமையிலான இலங்கை மகளிர் கபடி அணி, தொடக்கத்திலிருந்தே அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை தேசிய மகளிர் கபடி அணியில் இடம்பெற்றுள்ள ஈழத்தமிழ் வீராங்கனைகளான பிரியவர்ணா ராசதுரை மற்றும் டிலக்ஷனா விமலேந்திரன் ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி, அணியின் தொடர் வெற்றிகளுக்குப் பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
இந்தத் தொடரில் ‘குரூப் பி’ பிரிவில் களமிறங்கிய இலங்கை அணி, ஸ்கொட்லாந்து, கென்யா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய பலமான அணிகளுடன் மோதித் தனது திறமையை வெளிப்படுத்தியது.
தனது முதல் போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட இலங்கை அணி, 53–10 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. 22 ரைடு புள்ளிகளையும் 20 தற்காப்புப் புள்ளிகளையும் பெற்றதுடன், எதிரணியை 10 முறை ‘ஓல்-அவுட்’ செய்து அசத்தியது.
இரண்டாவது போட்டியில் பலம்பொருந்திய கென்யா அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, கடைசி வரை போராடியபோதிலும் 23–20 என்ற புள்ளிகள் கணக்கில் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இலங்கை வீராங்கனைகள், 65–16 என்ற புள்ளிகள் கணக்கில் எதிரணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றனர்.
சர்வதேச கபடி தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, 31–20 என்ற புள்ளிகள் கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது.
நான்கு லீக் ஆட்டங்களில் விளையாடிய இலங்கை அணி, மூன்று வெற்றிகள் மூலம் 6 புள்ளிகளைப் பெற்று ‘குழு பி’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கென்யா அணியும் 6 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, ‘குழு ஏ’ பிரிவில் இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், உகண்டா அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இதற்கமைய, இந்தியா, உகண்டா, இலங்கை மற்றும் கென்யா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதியில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

Comments 0
Be the first to comment.