—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பு – சாட்சியின் உயிருக்கு அச்சம்

நீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பு – சாட்சியின் உயிருக்கு அச்சம்

ஹோமாகம பொலிஸ் காவலின்போது இடம்பெற்ற கைதி ஒருவரின் மரணத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியாக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளைஞரை, சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 10 நாட்கள் கடந்தும் சிறைச்சாலை அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்தாமை நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது உ**யிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையான இஷார ஹர்ஷ குமாரவின் மரணம் தொடர்பான விசாரணையில், திங்கட்கிழமை (02) சாட்சியங்கள் அழைக்கப்பட்டிருந்தன.

இதன்போது, சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான வருண மதுசங்கவைப் பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், முறையான மருத்துவப் பரிசோதனைக்காக இதுவரை ஏன் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதவான் ரஜிந்தா ஜயசூரிய திறந்த நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

10 நாட்களுக்குப் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

இதற்குப் பதிலளித்த சிறைச்சாலை அதிகாரிகள், எலும்புப் பரிசோதனைக்காக அன்றைய தினம் காலை வருண மதுசங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வருண மதுசங்கவை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், வருண மதுசங்கவை எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அதன் பின்னர் அவரிடமிருந்து பெறப்படும் சாட்சியங்களின் அடிப்படையில், இஷார ஹர்ஷ குமாரவின் மரணத்திற்குப் பொறுப்பான ஏனைய அதிகாரிகள் எவரேனும் இருப்பின், அவர்கள் தொடர்பில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதவான் ரஜிந்தா ஜயசூரிய திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ராஜித குருசிங்கவையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஹோமாகம நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு மேலானவர்களா?

எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வருண மதுசங்கவின் தாயாரான சுஜாதா ஹெட்டியாராச்சி, வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டு கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தனது மகனை இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தாமல் வைத்திருக்கும் அளவுக்கு அதிகாரம் யார் கையில் இருக்கின்றது எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், நீதிமன்றம் வருண மதுசங்கவைப் பிணையில் விடுவித்தாலும், அவரது உயிருக்கு இருக்கும் அச்சம் நீங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து, குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் காணப்படும் அதிகாரம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பும் வகையில் அமைந்திருந்தது.

இதன்போது தனது மனவேதனையை வெளிப்படுத்திய அவர்,

“எனது மகனுக்குப் பிணை கிடைத்தாலும், அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும், நாங்கள் மரண பயத்துடன்தான் வாழ வேண்டியிருக்கும்.

ஹர்ஷவைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகளை எனது மகன் பார்த்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்தானே. எனவே, இந்த வழக்கில் சாட்சியமளிக்கவோ அல்லது அது தொடர்பாகத் தெரிவிக்கவோ முன்வந்தால் எனது மகனுக்கு என்ன நடக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, கொ**லை வழக்கொன்றில் நேரில் கண்ட முக்கிய சாட்சியாகத் தனது மகன் அடையாளப்படுத்தப்படுவாரானால், அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குமே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.