வெள்ள நிலைமை குறித்து எச்சரிக்கை

கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நிலவிய சிறிய வெள்ள நிலைமை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகின்றது.
இருப்பினும், வெள்ள நீர் வடியும் வேகம் மிகவும் மெதுவாகக் காணப்படுவதால், வெள்ள நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆறுகளின் தற்போதைய நீர்மட்டம் தொடர்பாக இன்று (29) வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், நேற்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது.
மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளதுடன், ஏனைய பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளது. குறிப்பாக, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் மேல் ஆற்றுப் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்சமாக 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆறுகளின் தற்போதைய நீர்மட்டம் குறித்துக் குறிப்பிடுகையில், நில்வளா கங்கையின் கீழ்ப்பகுதியான தல்கஹகொட மற்றும் மாத்தறைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் இன்னமும் சிறிய வெள்ள நிலைமை நிலவுகின்றது. இருப்பினும், நீர்மட்டம் மெதுவாகக் குறைந்து வருகின்றது.
அதேபோல், கிங் கங்கையின் பத்தேகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளிலும் சிறிய வெள்ள நிலைமை தொடர்வதுடன், அங்கு நீர் வடியும் வேகம் மிகவும் மெதுவாகக் காணப்படுகின்றது.
களு கங்கையின் மில்லகந்த, புட்டுபவுல மற்றும் களுத்துறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில், குறிப்பாக குடா கங்கைப் பகுதிகளில், வெள்ள நீர் மிகவும் மெதுவாகவே வடிந்து வருகின்றது. அதேவேளை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய நதிப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் சுமார் 38 நீர்த்தேக்கங்கள் இன்னமும் வான்பாய்ந்து காணப்படுகின்றன. இருப்பினும், மழைவீழ்ச்சியும் நீரோட்டமும் குறைந்துள்ளதால், மகா ஓயா, தெதுரு ஓயா, மீ ஓயா மற்றும் கலா ஓயா ஆகியவற்றின் நீர்த்தேக்கங்களிலிருந்து வான்கதவுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் பெரும்போக விவசாயப் பருவத்திற்காக நீரைச் சேமித்து வைக்கும் வகையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, தெதுரு ஓயா மற்றும் இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு சுமார் 5,000 கனஅடி வரையிலும், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு சுமார் 1,000 கனஅடி வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தென்மேற்கு, மேல் மாகாணங்கள் மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
மீண்டும் மழை பெய்யுமாயின், வெள்ள நீர் வடியும் வேகம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நில்வளா கங்கை, கிங் கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் கீழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் வெள்ள நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments 0
Be the first to comment.