10 நாட்களில் பல கோடி ரூபாய் இழப்பு; இழப்பீடு கோரும் மீனவர்கள்

வடக்கு கடல் பரப்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், வடபகுதி மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதார இழப்புகளுக்கு யார் பொறுப்புக்கூறுவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னாரில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் வருகை தொடர்பாக நீண்டகாலமாகத் தொடர்ந்து பேசி வருகின்றோம். இருப்பினும், கடந்த 10 நாட்களுக்குள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் எனக் குறிப்பிடும்போது தமிழக மீனவர்கள் மாத்திரமன்றி, தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்களும் எமது கடல் வளத்தை நோக்கி வருகின்றனர். அவர்கள் கடல் வளங்களைச் சுரண்டிச் செல்வதுடன், இங்குள்ள மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் ஒரு மீனவர் குரல் பதிவு ஒன்றின் ஊடாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். ஏனெனில், இத்தகைய சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான அல்லது இரு தரப்பு மக்களுக்கும் இடையிலான உறவுகளைப் பாதித்துவிடக்கூடும்.
அண்மையில் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 65 மீனவர்களில் 30 பேரின் வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இதனால், ஒரு படகுக்கு 5 இலட்சம் ரூபாய் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, வாங்காலைப்பாடு மற்றும் காட்டாஸ்பத்திரி என அழைக்கப்படும் பேசாலை மீனவர் சங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமையைத் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது.
கடற்படையும் இந்த விடயங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகத் தோன்றுகின்றது. ஒரு படகைக் கைது செய்வதன் மூலம் மாத்திரம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. எமது கடல் எல்லையைப் பாதுகாக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரையான கடற்பரப்பில் கடந்த 10 நாட்களுக்குள் மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. இதனால், கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய வலைகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, முல்லைத்தீவில் இறால் பிடிப்புக்கான பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்திய மீனவர்களும் காரைக்கால் மீனவர்களும் அங்கு வருகை தருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட படகுகளைக் கண்டதாக அங்குள்ள மீனவ சமூகம் எமது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
அண்மையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்ததுடன், இந்திய உச்சநீதிமன்றமும் தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது.
இருப்பினும், அவற்றைப் பொருட்படுத்தாமல் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் தமது விருப்பப்படி மீண்டும் மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என அங்குள்ள பொலிஸாரும் அறிவுறுத்துகின்றனர். அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டாலும், மீனவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே, எமது கடல் எல்லைக்குள் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். தற்போது ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு யார் நட்டஈடு வழங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் பல குடும்பங்கள் இன்று கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றன.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவரின் தாய், தீபாவளியைக் கொண்டாடத் தயாராக இருந்தபோது தனது மகன் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார். அவர் தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலையைப் பற்றியே கவலைப்படுகின்றார். ஆனால், இங்குள்ள மீனவர்கள் பல வருடங்களாகத் தங்களின் வாழ்வாதாரத்தையும் தொழிலையும் இழந்து வருவதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை.
தமிழக மீனவர்களும் அங்குள்ள மக்களும் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் எமது கடல் எல்லையைத் தாண்டி வந்து, எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்போது மாத்திரமே கடற்படையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
கடல் எல்லையைத் தாண்டுவது என்பது வேறு; எமது கரையை நோக்கி வந்து மீன்பிடிப்பது என்பது வேறு. எமது கரை வரை வந்து மீன்பிடி வலைகளை அறுத்து, உபகரணங்களைச் சேதப்படுத்தும்போது எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்?
கடற்படைக்கும் இதில் பொறுப்புள்ளது.
நூற்றுக்கணக்கான படகுகள் எமது கடல் எல்லையைத் தாண்டி வருகின்றன. அவற்றில் ஒரு படகைக் கைது செய்துவிட்டு நடவடிக்கை எடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறான தொடர்ச்சியான நடவடிக்கைகளால் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஒரு மீனவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய குரல் பதிவை மட்டும் நியாயப்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டாம். எமது மீனவர்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவைப் பேண விரும்புகின்றோம். எனவே, எமது கடல் எல்லையைத் தாண்டி வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு மேலதிகமாக, அண்மையில் முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களின் நிலைமை இன்றுவரை தெரியவில்லை. அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து வேதனையுடன் உள்ளனர்.
அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினரும் அங்குள்ள மீனவ சமூகத்தினரும் ஈடுபட்டிருந்தாலும், இதுவரை அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றன.
இந்த விடயத்தைச் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு சென்று, காணாமல் போன மீனவர்களின் நிலைமையைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் குடும்பத்தினருடன் இணைக்க வேண்டும். இந்த முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கும் இதில் பொறுப்பு உள்ளது. கடந்த 10 நாட்களுக்குள் ஏற்பட்டுள்ள இழப்பு பல கோடி ரூபாய் பெறுமதியானதாகும்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக அடுத்தகட்டமாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது? தொடர்ந்து இந்த நிலைமையை அனுமதிக்கப்போகின்றதா? மீனவர்கள் தொடர்ந்தும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
எனவே, அரசாங்கம் உடனடியாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தாலும், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக முறைப்பாடுகளை மட்டுமே பதிவு செய்து வருகின்றோம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைத்ததாக இல்லை.
எனவே, அரசாங்கமும் கடற்படையும் தமது பொறுப்பை உணர்ந்து, வடபகுதி மீனவர்களின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.