—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

6 பெண்கள் உட்பட 229 பேருக்கு நியமனம்!

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் களப்பணிகளை வலுப்படுத்துவதுடன், மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் மூன்றாம் தர வனவிலங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக 229 பேருக்கு நேற்று (23) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சின் வளாகத்தில், சுற்றாடல் அமைச்சரின் தலைமையிலும் பிரதி சுற்றாடல் அமைச்சரின் பங்கேற்புடனும் இந்த நியமன நிகழ்வு நடைபெற்றது.

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் அடிப்படைக் கள உத்தியோகத்தர் படையாக வனவிலங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் செயற்படுகின்றனர்.

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டுதல், மின்சார வேலிகளைப் பராமரித்தல், மனித–யானை மோதல் நிலவும் பகுதிகளில் மக்களின் உயிர் மற்றும் சொத்துகளைப் பாதுகாத்தல் ஆகியவை இவர்களின் முக்கிய பொறுப்புகளாகும்.

அத்துடன், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நுழைவுகள், வனவிலங்கு வேட்டைகள், கண்ணிகள் மற்றும் மின்சாரக் கம்பிகள் மூலம் விலங்குகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள், இயற்கை வளங்களைச் சட்டவிரோதமாகக் கொள்ளையிடுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுவர்.

தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதும் இவர்களின் பொறுப்புகளில் அடங்குகிறது.

மேலும், ஆபத்துகளில் அல்லது கண்ணிகளில் சிக்கும் விலங்குகளை மீட்டு, சிகிச்சைக்காக கால்நடை மருத்துவப் பிரிவுகளுக்கு அனுப்பும் பணிகளையும் மேற்கொள்வர்.

மனித–யானை மோதலால் பாதிக்கப்படும் கிராமப்புற மக்களுடன், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன், உணர்வுபூர்வமாகவும் பொறுமையுடனும் தொடர்புகொண்டு பதற்றமான சூழ்நிலைகளைத் தணிப்பதில் பெண் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மோதல்களைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பில் கிராமப்புறப் பெண்களை வலுப்படுத்துவதிலும் அவர்கள் பங்களிப்பர்.

போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 223 ஆண் உத்தியோகத்தர்களும் 6 பெண் உத்தியோகத்தர்களும் இந்த நியமனங்களைப் பெற்றுள்ளனர்.

நியமனம் பெற்றவர்கள் ரந்தெனிகல, ரிட்டிகல, மாதுரு ஓயா மற்றும் கிரிதலே ஆகிய வனவிலங்கு பயிற்சி நிலையங்களை மையமாகக் கொண்டு ஆறு மாத கால முழுநேர வதிவிடப் பயிற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இந்தப் பயிற்சியில் வனவிலங்கு முகாமைத்துவம், சட்ட அமுலாக்கம், களப்பணித் திறன்கள் மற்றும் மனப்பாங்கு மேம்பாடு உள்ளிட்ட துறைகள் உள்ளடக்கப்படும்.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள் நிரந்தர சேவையில் இணைக்கப்பட்டு, நாடளாவிய ரீதியில் மனித–யானை மோதலைக் குறைக்கும் விசேட நடவடிக்கைகள் மற்றும் வனவளப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, மேலதிக செயலாளர்கள், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.