அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருக்கு இடையில் உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அமைதியை ஏற்படுத்துவதற்காக யுக்ரைன் தொடர்ந்து பாடுபடுவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள போதிலும், யுக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் அண்மையில் முன்னெடுத்த கடுமையான வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.
யுக்ரைன் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றிருந்த வேளையில், ரஷ்யாவிலிருந்து டீசலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டமை யுக்ரைன் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ரஷ்யா மீது விதிக்கப்படவிருந்த ‘கிரஹாம் சட்ட’ தடைகளை ட்ரம்ப் தற்காலிகமாக இடைநிறுத்தினார். இந்த நடவடிக்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவும் என அமெரிக்கா தெரிவித்தாலும், இது யுக்ரைனுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பாக வழமையாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை உளவுத் தகவல்களும் ஸ்டார்லிங்க் இணையச் சேவைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக யுக்ரைன் குற்றம் சாட்டியது. எனினும், மென்பொருள் கோளாறு காரணமாகவே இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறித்து டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், யுக்ரைனுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இதுவெனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒஸ்லோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் அடுத்தகட்டமாகப் புதிய முன்மொழிவுகளுடன் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, முந்தைய கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, ஏவுகணை எச்சரிக்கை அமைப்புகளும் ஸ்டார்லிங்க் இணையச் சேவைகளும் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யுக்ரைன் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Comments 0
Be the first to comment.