ஏழு நாள் ஒப்பந்தம்

பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாக அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஈரான் முன்வைத்துள்ள ஏழு நாள் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ஏழாவது நாளில் முழுமையாகத் திறப்பதற்கான ஏழு நாள் திட்டமொன்றை ஈரான் முன்வைத்துள்ளதாக, ஈராக் நாட்டின் அல் அக்பாரியா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அரக்சி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு வொஷிங்டன் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், அதில் சில மேலதிக ஏற்பாடுகளைச் சேர்த்துக்கொள்ள அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் குறிப்பாணையின் கீழ் அமெரிக்கா தனது அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்பதே ஈரானின் எதிர்பார்ப்பு எனவும் அரக்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செங்கடல் விவகாரங்களில் ஈரானுக்குத் தொடர்பில்லை எனத் தெரிவித்த அவர், சவுதி அரேபியா மற்றும் யேமனின் ஹூதி அமைப்புக்கு இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஈரான் முன்வைத்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், யேமனில் எகிப்து தலையிடுவது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் எனவும், பொருளாதாரத் தடைகள் அல்லது இராணுவ அச்சுறுத்தல்கள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments 0
Be the first to comment.