திலீபன் சிலை விவகாரம்: விசாரணை

தியாக தீபம் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டுதான் நல்லூரில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்களா என யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி வி. மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் காலப்பகுதியில் நல்லூரில் அவரது சிலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில், யாழ்ப்பாணம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று புதன்கிழமை மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மேயரிடம் சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையின்போது, திலீபனுக்குச் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமை, சிலை வடிவமைக்கப்பட்ட விதம், சிலை உருவாக்கப்பட்ட இடங்கள் மற்றும் இதற்கான சபைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பிரசன்னமாகியிருந்த மாநகர சபை உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாநகர சபை அலுவலகத்துக்கு நேரில் சென்று இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.