—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பிலிப்பைன்ஸில் வெடித்த மயோன் எரிமலை

பிலிப்பைன்ஸில் வெடித்த மயோன் எரிமலை

பிலிப்பைன்ஸில் மிகவும் தீவிரமான எரிமலைகளில் ஒன்றான மயோன் எரிமலை, நேற்று வெள்ளிக்கிழமை (30) வானத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மீற்றர் உயரத்திற்குப் புகை கலந்த கரும் சாம்பலை வெளியிட்டதாகவும், இந்த நிகழ்வு ஏறத்தாழ ஆறு நிமிடங்கள் நீடித்ததாகவும் அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மயோன் எரிமலையைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும், எச்சரிக்கை அளவை 0 முதல் 5 வரையிலான அளவுகோலில் 2 இலிருந்து 3 ஆக உயர்த்தியுள்ளதுடன், எரிமலைப் பள்ளத்திலிருந்து 6 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 3,000 மீற்றர் உயரத்திற்குப் பரவிய சாம்பல் படலம் படிப்படியாகத் தென்மேற்கு திசையில் நகர்ந்து, அருகிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குத் தென்கிழக்கே சுமார் 330 கிலோமீற்றர் தொலைவில், கிட்டத்தட்ட சரியான கூம்பு வடிவில் அமைந்துள்ள 2,462 மீற்றர் உயரமுள்ள மயோன் எரிமலை, இந்த ஆண்டில் அதிக செயல்பாடுகளைக் காட்டிய மூன்று பிலிப்பைன்ஸ் எரிமலைகளில் ஒன்றாகும்.

டெக்டோனிக் தகடுகள் (Tectonic Plates) ஒன்றோடொன்று மோதும் பசிபிக் 'நெருப்பு வளையத்தில்' (Ring of Fire) பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்களும் எரிமலைச் செயல்பாடுகளும் வழக்கமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.